உள்நாட்டு செய்தி
பணிப்பகிஷ்கரிப்பு…
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நியாயமற்ற வரி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றைய (15) தினத்தை பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.
அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நில அளவை திணைக்களம், வருமான வரி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்கவுள்ளனர்.
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றைய பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
வங்கி வட்டி வீதத்தை குறைத்தல், 20000 ரூபா வாழ்க்கைச் செலவு நிவாரணத்தை வழங்குதல், மின்சார கட்டணத்தை குறைத்தல், ஓய்வூதிய குறைப்பை உடனடியாக நிறுத்துதல் உள்ளிட்டவை இவர்களின் பிரதான கோரிக்கைகளாக அமைந்துள்ளன.
அதிபர், ஆசிரியர், தாதியர், சுகாதாரச் சேவை, தபால், அரச முகாமைத்துவ சேவைகள், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் இன்றைய(15) பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று(15) நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இதனிடையே, சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினரும் இன்று(15) காலை 6.30 முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
கொடுப்பனவுகள் வழங்கப்படாமை, ஓய்வூதிய குறைப்பை உடனடியாக நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இதனிடையே, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று(15) ஏழாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் இன்று(15) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்விச் செயலாளர் நேற்று(14) அறிவித்திருந்தார்.