உள்நாட்டு செய்தி
ஆசிய பிராந்தியத்தில் பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க இலங்கை முன்னிலையில் இருக்க வேண்டும்
- இலங்கை நெருக்கடியை எதிர்கொண்ட போது அதிலிருந்து விடுபட ஆதரவளித்த நபர்களிடையே உலக அளவில் மூன்று பெண்கள் உள்ளனர்.-சர்வதேச மகளிர் தின தேசிய விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு.
ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
“பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கை” மற்றும் “பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்திட்டம்” ஆகியவை அதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சார்க் அமைப்பில் பெண்களின் உரிமைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாததால், அந்த உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக சார்க் நாடுகளின் பிரதான பெண் செயற்பாட்டாளர்களின் கூட்டம் இந்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆசிய பிராந்தியத்தில் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் இலங்கை முன்னிலையில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இன்று (08) இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின தேசிய விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.