உள்நாட்டு செய்தி
வருட இறுதிக்குள் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை…
ஒரு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்பதற்கு ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அவசியம் எனவும், ஒழுக்கமான சமூகத்தின் ஊடாக இலங்கையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இன்று மக்கள் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற போதிலும் இதனை குறுகிய காலத்திற்கே எதிர்பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த வருட இறுதிக்குள் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
தேசிய மாணவர் படையணிக்கு ஜனாதிபதி வர்ணம் மற்றும் படையணி வர்ணம் வழங்கும் முகமாக இன்று (19) ரன்தம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
142 வருட வரலாற்றைக் கொண்ட தேசிய மாணவர் படையணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் ஜனாதிபதி வர்ணம் மற்றும் படையணி வர்ணம் என்பன சூட்டப்பட்டன.
ஜனாதிபதி மற்றும் படையணி வர்ணங்களை வழங்கிய பின்னர், மாணவர் படையணியின் அணிவகுப்பை ஜனாதிபதி கண்டுகளித்தார்.
நாட்டில் வலுவான பொருளாதாரம் மற்றும் புதிய சமூகமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் இளைஞர்களுக்காக உருவாக்கப்படும் புதிய சமூகத்திற்கு, ஒழுக்கமான தலைமைத்துவத்தை மாணவர் படையணி வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.