உலகம்
துருக்கி: பூகம்பம்,3,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
துருக்கியில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தில் அந்த நாட்டின் கரம்மான்மராஸ் நகரின் கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்தன. அங்கு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புப் படை வீரர்கள் தீவிரமாக தேடினர்.
அங்காரா: துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. துருக்கியில் 2,316 பேர், சிரியாவில் 1,300 பேர் என மொத்தம் 3,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதிப்பு கடுமையாக இருப்பதால், இரு நாடுகளிலும் உயிரிழப்பு 10,000-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.
மேற்கு ஆசியா, தென்கிழக்கு ஐரோப்பிய பகுதியில் துருக்கி அமைந்துள்ளது. அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியில் காஜியன்டப் நகரை மையமாகக் கொண்டு நேற்று அதிகாலை 4.17 மணிக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவானது. இதில் துருக்கியின் 10 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
குறிப்பாக காஜியன்டப், சன்லிஉர்பா, தியார்பக்கிர், அடியாமன், மலாட்யா, உஸ்மானியா, ஹதே, கில்லிஸ் ஆகியமாகாணங்களில் 2,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
துருக்கியின் காஜியன்டப் நகரில் ரோமானிய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கோட்டை இருந்தது. 2,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோட்டை பூகம்பத்தில் தரைமட்டமானது.
துருக்கியின் தெற்கு பகுதியில் குர்து இன மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அங்கு குறிப்பிட்ட பகுதிகள், குர்து கிளர்ச்சி குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. பூகம்பத்தால் அங்கும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
3-வது பெரிய பூகம்பம்: துருக்கியில் முதல் பூகம்பத்துக்கு பிறகு 78 முறை அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இதில் சில அதிர்வுகள் ரிக்டர் அலகில் 6.5-க்கும் அதிகமாக பதிவாகின. நேற்று பிற்பகல் 1.30 மணிஅளவில் துருக்கியின் மத்திய பகுதியில்மீண்டும் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.5 ஆக பதிவான இந்த பூகம்பம், முதல் பூகம்பம் ஏற்பட்ட காஜியன்டப் பகுதியில் இருந்து 96 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.
துருக்கியில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் 3-வது பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6 ஆக பதிவானது.
10 மாகாணங்களுக்கு விடுமுறை: பாதிப்புகள் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறியிருப்பதாவது: பூகம்பத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 மாகாணங்களிலும் ஒரு வாரத்துக்கு பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட காஜியன்டப், அடியாமன், ஹதே உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 2 வாரங்கள் விடுமுறை விடப்படுகிறது.
விமான ஆம்புலன்ஸ், விமானப் படை சரக்கு விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மீட்புப் படை வீரர்கள் துருக்கிக்கு வந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் துருக்கியின் பல்வேறுஇடங்களில் சமையல் எரிவாயு கிடங்குகள், பெட்ரோலிய கிடங்குகள் தீப்பற்றிஎரிகின்றன. மக்கள் திறந்தவெளியில் குவிந்துள்ளனர். மின் விநியோகம், குடிநீர்விநியோகம், தொலைதொடர்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை, கடும்பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சிரியாவில் கடுமையான பாதிப்பு: துருக்கியின் அண்டை நாடான சிரியாவின் வடக்குப் பகுதியில் பூகம்பம் கடுமையாக உணரப்பட்டது. அலெப்போ, லதாகியா, ஹமா, டார்டஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அந்த நாட்டில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சிரியா அதிபர் ஆசாத், தலைநகர் டமாஸ்கஸில் நேற்று உயர்நிலை ஆலோசனை நடத்தினார். ராணுவம், அரசு ஊழியர்கள், தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறைகளை சேர்ந்தவர்களை மீட்புப் பணியில் முழுமையாக ஈடுபடுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
சிரியாவில் சன்னி முஸ்லிம் பிரிவைசேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள் செயல்படுகின்றன. அந்த கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பூகம்பபாதிப்புகள் அதிகமாக உள்ளன. சிரியாவில் பூகம்பத்துக்குப் பிறகு 40-க்கும்அதிகமான நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
அடுத்த சில நாட்களுக்கு இரு நாடுகளிலும் நிலநடுக்கங்கள், நிலஅதிர்வுகள் தொடரும் என்று சர்வதேச புவியியல் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பூகம்பம் இஸ்ரேல், லெபனான் நாடுகளிலும் கடுமையாக உணரப்பட்டது. எனினும்உயிரிழப்பு, பொருட்சேதம் இல்லை. மிக தொலைவில் உள்ள சைப்ரஸ், எகிப்து, ஜார்ஜியா, ருமேனியா, கிரீன்லேண்ட் உள்ளிட்ட நாடுகளிலும்அதிர்வு உணரப்பட்டது.
பூகம்பம் குறித்து அமெரிக்க புவியியல்துறை வட்டாரங்கள் கூறியதாவது: பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகமாகி சக்தி வெளியேற்றப்படும்போது தளத்தட்டுகள் நகர்கின்றன. டெக்டோனிக் என்ற இந்த தளத்தட்டுகளின் நகர்வால் பூகம்பம் ஏற்படுகிறது. அன்டோலியன் எனப்படும் தளத்தட்டுகள் மீது துருக்கிஅமைந்திருக்கிறது. இந்த தளத்தட்டு, யுரேசியா, ஆப்பிரிக்கா, அரேபிய தளத்தட்டுகளுக்கு இடையே சிக்கியுள்ளது.
ஆப்பிரிக்க, அரேபிய தளத்தட்டுகள் நகரும்போது சாண்ட்விச் போன்று துருக்கி இடையில் சிக்குகிறது. இதன்காரணமாகவே அந்த நாட்டில் மிகப்பெரிய பூகம்பங்கள் ஏற்படுகின்றன.
கடந்த 1939-ம் ஆண்டில் துருக்கியில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. அது ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவானது. அப்போது துருக்கியில் 30,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1999-ல் 7.2 ரிக்டர்அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. 17,000 பேர் உயிரிழந்தனர். அதுபோலவே தற்போதும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கணிப்பின்படி துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு 10,000-ஐ தாண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் மோடி இரங்கல்: மோப்ப நாய்களுடன் வீரர்கள் விரைவு
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் அதிக அளவில் உயிரிழப்பு, பொருட்சேதம் ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இரு நாட்டு மக்களுக்கும் இந்தியா துணைநிற்கும். இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கும். அவர்களது துயரத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், துருக்கி, சிரியாவுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இதன்படி, தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 2 குழுக்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைகின்றன. இந்த குழுக்களில் 100 வீரர்களுடன், பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் இடம்பெற்றுள்ளன.