Connect with us

உள்நாட்டு செய்தி

“நன்றியுணர்வு இலங்கை சமூகத்தின் ஒரு தனித்துவமான பண்பாகும்”

Published

on

தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வினை தெரிவிக்கும் திருநாளாக தைப்பொங்கல் விளங்குகின்றது. 

தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தலைசிறந்ததாகவும் உயர்வானதாகவும் தைப்பொங்கல் பண்டிகை போற்றப்படுகின்றது.

இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர்.

உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் தைப் பொங்கல் தமது வாழ்த்துச் செய்தி….

“உழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார பண்டிகையாகும். இது இயற்கையுடன் பிணைந்த, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையையும் பயிர்களுக்கு வளம் சேர்த்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதையும் குறிக்கிறது. இந்து சமயத்தின்படி வாழும் தமிழ் மக்கள் தைத்திருநாளை தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாக கருதுகின்றனர். அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் எமது நாட்டின் சகோதர தமிழ் மக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன்.

விளைச்சலின் மூலம் கிடைக்கும் புத்தரிசியை பாலுடன் சேர்த்து பொங்க வைத்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும், முழு உலகிற்கும் சுபீட்சம் கிட்ட வேண்டும் என்று அவர்கள் பிரார்த்திக்கின்றனர். இன, மத பேதமின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டுவருவது என்னுடையவும் எமது அரசாங்கத்தினதும் ஒரே நோக்கமாகும். இந்த உன்னதமான நோக்கத்தை அடைந்துகொள்வதற்கான வழிவகைகள் எமது அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் ´சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நன்றியுணர்வு என்பது இலங்கை சமூகத்தின் ஒரு தனித்துவமான பண்பாகும். அறுவடையின் முதல் பகுதியை சூரியனுக்கு படைக்கும் தைப்பொங்கல் பண்டிகை, பழங்காலத்திலிருந்தே நம் சமூகம் மதித்து வரும் விழுமியங்களை குறிக்கிறது. இதன் காரணமாக தைப்பொங்கல் பண்டிகை தேசிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.

மனித சமூகத்தின் உன்னதமான நன்னெறிகளை குறிக்கும் வகையில், தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

தைத் திருநாளை கொண்டாடும் அனைத்து வாசகர்களுக்கும் மகிழ்வான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.