உள்நாட்டு செய்தி
புதிய பேரூந்து சேவை
2023ஆம் ஆண்டில் பொதுப் போக்குவரத்திற்காக 500 புதிய பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு கிடைத்த 75 புதிய பேருந்துகளை நாடளாவிய ரீதியில் உள்ள டிப்போக்களுக்கு விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பத்தரமுல்ல ஜப்பானிய நட்புறவுப் பாதையில் நடைபெற்ற இவ்வருட பேரூந்து விநியோகத் திட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இன்றைய தினம் இலங்கையின் போக்குவரத்து துறையில் மிகவும் முக்கியமான நாளாகும். கிராமப்புறங்களில் உள்ள சாலைகளின் நிலைக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட 75 நவீன பேருந்துகள் எங்கள் போக்குவரத்து அமைப்பில் சேரும் தருணம். இந்திய அரசின் ஆதரவுடன் இந்திய கடன் திட்டத்தின் கீழ் சுமார் 100 இலட்சம் பெறுமதியான இந்தப் பேருந்துகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இத்திட்டங்களின் கீழ் நாட்டிற்கு கிடைத்த மற்றுமொரு தொகுதி பஸ்கள் நாடளாவிய ரீதியில் உள்ள டிப்போக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட அனைத்து பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த பஸ்கள் டிப்போக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 2023-ம் ஆண்டு பொது போக்குவரத்துக்காக 500 புதிய பேருந்துகளை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். இந்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போக்லே, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத், இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன், சாந்த பண்டார, திலும் அமுனுகம மற்றும் பாராளுமன்ற அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். – ஊடக பிரிவு