உள்நாட்டு செய்தி
மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் தோட்டத் தொழிலாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும்
மின்கட்டணம் உயர்த்தப்பட்டபோது மின்கட்டணம் செலுத்த முடியாத நுகர்வோரின் மின் இணைப்பை துண்டிக்க மின்சார சபை முடிவு செய்தபோது, மின் கட்டணத்தை மலையக தோட்டத்தொழிலாளர்கள் சாப்பாட்டை அடகு வைத்து செலுத்தியதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.வி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான, ப.சந்திரசேகரனின் 13வது நினைவு தினம் (01) அன்று ஹட்டன் நகரிலுள்ள மலையக மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற போது ராதா கிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார். மீண்டும் மின்கட்டணத்தை அதிகப்படுத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் எனவும், இதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் மண்ணெண்ணெய் விளக்கைக் கூட ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இராதா கிருஷ்ணன் தெரிவித்தார். தற்போதுள்ள சூழ்நிலையால் தோட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த நாடு சுதந்திரமடைந்து 75 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை கிடைத்து குறுகிய காலமே ஆவதாகவும் இராதா கிருஷ்ணன் தெரிவித்தார். அக்காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வழங்குவதற்கு எந்தவொரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாவிட்டாலும் சமூகம் பற்றி கருணையுடன் சிந்திக்குமாறு இராதா கிருஷ்ணன் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறார். தோட்ட வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், தற்போதுள்ள மருந்து தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு, அந்த மருந்துகளை வெளியில் இருந்து பெறுவதற்கு வைத்தியர்கள் மருந்து சீட்டு கொடுத்தாலும், தோட்டத் தொழிலாளர்களுக்கு வாங்கும் பொருளாதார நிலைமை இல்லை எனவும் தெரிவித்தார்.