உலகம்
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று…
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலாயத்தில் இன்று நடைபெறுகிறது.
பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாட்டில் இன்று (19) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்க நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது என பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலாயத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து நேரப்படி இரவு 11.30 க்கு மகா ராணியின் இறுதிச்சடங்கு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ராணியின் உடலத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் நேற்று இரவு (18) இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் நேற்றிரவு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்த இறுதிச் சடங்குகள் சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும். அதன்பின் ராணியின் உடலம் விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இறுதி ஊர்வலத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது சகோதரர்கள், சகோதரி, மகன்கள் ஆகியோர் ராணுவ வீரர்களுடன் அணிவகுத்துச் செல்வர். வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெறும் இறுதிச் சடங்கு கூட்டத்தில், உலகம் முழுவதிலும் இருந்துஅழைக்கப்பட்டுள்ள தலைவர்கள் சுமார் 2,000 பேர் கலந்து கொள்வர்.