உள்நாட்டு செய்தி
மண்சரிவு அபாய நிலை

கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டம் தகரமலை பிரிவில் நெடுங்குடியிருப்பில் உள்ள மண்மேடு பெய்த மழை காரணமாக சரிந்து விழுந்துள்ளது.
இதனால் மூன்று வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சமயலறையிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளது.
அத்தோடு குடியிருப்பு பகுதிகளில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது. வீட்டுக்குள் நீர் வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த 16 பேர் தற்போது தத்தமது வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.
எனினும், ஏனைய வீடுகளுக்கும் மண்சரிவு அபாய நிலை காணப்படுவதாகவும், இதனால் தாம் அச்சநிலையோடு இருப்பதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதற்கு தீர்வு பெற்று தர வேண்டும் என பாதிக்கப்பட்ட இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பத்தனை சந்தி பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் அவ்விடத்தில் ஒரு வழி போக்குவரத்து மாத்திரமே இடம்பெற்று வருகின்றன.
தொடர்ச்சியாக மலையகத்தில் பல பகுதிகளுக்கு கடும் காற்றுடன் தொடர் மழை பெய்து வருவதனாலும், தொடர் மலை பகுதிகளில் காணப்படும் பல வீதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனாலும் வாகன சாரதிகள் அவதானமாக தமது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.