உள்நாட்டு செய்தி
ஆலய நிர்வாக சபை தெரிவுக் கூட்டம் ஒத்தி வைப்பு
பத்தனை டெவன் தோட்ட காட்டு மாரியம்மன் ஆலயத்தின் புதிய நிர்வாக சபை கூட்டத்தில் எழுந்த சர்ச்சைகளால் மறு அறிவித்தல் வரை தெரிவுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த மேற்படி ஆலயத்திற்கு முதற் தடவையாக உத்தியோகபூர்வமான நிர்வாக சபையை தெரிவு செய்யும்படி மாவட்ட செயலாளரின் உத்தரவுக்கமைய இன்று (25.07.2022) திங்கட்கிழமை 2 மணியளவில் பத்தனை ஸ்ரீ சிவசுப்ரமணிய ஆலய மண்டபத்தில் மேற்படி கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர் மற்றும் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டிருந்தனர்.
புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்காக கிரேக்கிலி, பெய்த்லி, பொரஸ்ட்கிறிக், டெவன் ஆகிய தோட்டப்பிரிவு மக்களும் பத்தனை நகர் மற்றும் பத்தனை கொலனி பிரதேச மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
கூட்டம் ஆரம்பிப்பதற்கு தயாரான நிலையில் டெவன் தோட்டத்திலிருந்து வருகை தந்தோர் இந்த ஆலயம் தமது தோட்டத்துக்கு உரியது என்றும் ஏற்கனவே இந்த ஆலயத்துக்கு தமது தோட்டத்தில் நிர்வாக சபை உள்ளது என்றும் புதிதாக வெளியிலிருந்த இனந்தெரியாதோர் ஏன் ஒரு நிர்வாக சபையை உருவாக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியதோடு யார் இதற்கு அனுமதி வழங்கினர் என கேள்வியெழுப்பினர். இதன்போது இந்த கூட்டத்தில் ஒரு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
மேலும் இது டெவன் பிரதேசத்துக்கு உரியது என்பதாலேயே அந்த தோட்டத்தில் உள்ளவர்கள் பரம்பரையாக இங்கு பூஜை செய்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர்கள் அதற்குரிய ஆவணங்கள் தம்மிடம் உள்ளது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து ஏனைய பிரிவு மக்களில் சிலரும் அவர்களோடு வாக்குவாதப்பட, அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் இது குறித்து தாம் மாவட்ட செயலாளருடன் பேச்சு நடத்தி நிர்வாக சபையை தெரிவு செய்வது குறித்து அறிவிப்பதாக தெரிவித்ததையடுத்து கூட்டம் இடம்பெறாமலேயே அனைவரும் கலைந்து சென்றனர்.
மேற்படி ஆலயத்துக்கு செல்லும் நுழைவாயிலுக்கு அருகில் அமைந்திருக்கும் சர்ச்சைக்குரிய கடைத்தொகுதி யாரால் அமைக்கப்பட்டது என்று கடந்த திங்கட்கிழமை பிரதேச மக்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
எனினும் அதற்கும் தமக்கும் எந்த தொடர்புகளும் இல்லை என்றும் அது ஆலய நிர்வாகத்துக்குரியது என கொட்டகலை பிரதேச சபை நிர்வாகம் அறிவித்திருந்தாலும் இதற்கு முன்னர் இந்த ஆலயத்துக்கு எவ்வித நிர்வாக சபையும் இல்லாத காரணத்தினாலேயே புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கு மாவட்ட செயலாளரினால் இன்றைய தினம் (25)கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.