உள்நாட்டு செய்தி
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள காலி முகத்திடல் தாக்குதல்
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங் தெரிவித்துள்ளார்.
இதன்போது காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்குதவற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காலி முகத்திடல் போராட்டக்களம் தொடர்பான செய்திகள் குறித்து உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.
அமைதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்குள்ள உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பில் அமைதியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் நடத்திய தாக்குதல் தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய அலுவலகம் ட்விட்டரில் பதிவொன்றை இட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் பொறுமையுடனும் வன்முறையிலிருந்து ஒதுங்கியும் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினொட் வலியுறுத்தியுள்ளார்.
போராட்டக்களத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.