உள்நாட்டு செய்தி
நாளை சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது
நாளை (08) சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
சில நாட்களுக்குள் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளுக்கு இன்று சமையல் எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தது.
பல நாட்களாக சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருவதால் லிட்ரோ நுகர்வோர் இன்றும் எரிவாயு சிலிண்டரை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
இந்தநிலையில் நேற்று காலை 2,000 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிக்கொண்டு இலங்கை வந்தடைந்த கப்பல் இன்று காலை 8.30 மணியளவில் இறக்கப்பட்டது.
அதன்படி, முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் இருந்து சமையல் மற்றும் வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இன்று காலை ஆரம்பமானது.
அதன்படி, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளுக்கு இன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தது.
எரிவாயு சிலிண்டர்களை விற்கும் விற்பனை பிரதிநிதிகளின் பட்டியலை www.litrogas.com என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இதேவேளை, விலை அதிகரிக்கப்பட்டுள்ள லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் இன்றும் இடம்பெற்றது.
அதன்படி, லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லொறிகள் பல பகுதிகளுக்கு இன்று சென்றிருந்தன.