உள்நாட்டு செய்தி
எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அரசாங்கம் தயார்
எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், அரசும் தயாராகவே இருக்கின்றன என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
மக்களின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்காக 2022 அண்டு வரவு செலவு திட்டத்தில் கொண்டுவரப்பட்ட கிராமத்திற்கான ஒரு லட்சம் வேலைத்திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடாளவிய ரீதியில் இன்று (03) காலை 8.52 இற்கு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த வேலைத்திட்டம் மலையகத்தில் தோட்டம் மற்றும் கிராம புறங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
குறித்த வேலைத்திட்டத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் அவர்களின் பங்களிப்பில் கினிகத்தேனை யட்டிபேரிய பௌத்த நிலையத்தில் மகர தோரணம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்தோடு, குயில்வத்தை பகுதியில் கடையுடன் கூடிய வீட்டுத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.
இதேவேளை, பத்தனை திம்புள்ள தோட்டத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கான பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இதனையடுத்து, வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கடைத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், உப தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்கள் பிரதேச வாசிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.