Connect with us

Uncategorized

“கடந்த ஆட்சியில் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டது”

Published

on

கடந்த ஆட்சியில்போல் தேர்தல் இழுத்தடிக்கப்படாது. மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறும். தேர்தல் முறைமை குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும்.” – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (02)தெரிவித்தார்.

கொட்டகலையில் அமைந்துள்ள சீல்.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று (02.04.2021) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் குறைநிறைகளை கண்டவறிதற்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலுக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது, இ.தொ.கா பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் தங்களின் தேவைகளையும், குறைபாடுகளையும் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் சுட்டிக்காட்டினர். இதற்கு அமைச்சர் வெகு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், இ.தொ.கா பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.

ஊடகங்களுக்கு மேலும் கூறியவை வருமாறு,

” மத்திய அரசாங்கம், மாகாணசபைகள் மற்றும் உள்ளாட்சி மன்றங்கள் என மூன்று கட்டமைப்புகளும் இணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஒரு வேலைத்திட்டத்தை மூன்று தரப்புகளுமே முன்னெடுக்கவேண்டிய நிலைகூட ஏற்படுகின்றது. இதனால் மக்கள் பணம் வீண்விரயமாகின்றது. அது தொடர்பில் தெளிவுபடுத்திவருகின்றோம்.

கடந்த ஆட்சியின்போது மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டது. ஜனநாயகத்தை, மக்கள் இறைமையை மதிக்கும் அரசாங்கம் என்ற வகையில் மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்.

எந்த முறைமையின்கீழ் நடத்த வேண்டும் என்பது குறித்தான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். அந்த கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படலாம்.

மக்களுக்கு அதேபோல் சபைகளின் நிர்வாகத்தை கொண்டுநடத்துவதற்கு சிக்கல் எழாத வகையிலும், பலமான கட்டமைப்பை உருவாக்கும் விதத்திலும் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படும்.” – என்றார்.