உள்நாட்டு செய்தி
மன்னாரில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடத்திய இருவர் கைது.
மன்னார் நாச்சிக்குடா பகுதியில் டிப்பர் ரக வாகனம் ஒன்றின் மூலம் 7 மில்லியன் ரூபா பெறுமதியான 24 கிலோ கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
நாச்சிக்குடா வெள்ளாங்குளம் வீதித் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த டிப்பர் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட வட மத்திய கடற்படை கட்டளை அதிகாரிகள், அதில் கேரள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து அதன் சாரதி மற்றும் உதவியாளரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த கேரள கஞ்சா கையிருப்பு இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு வேறு பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டதாக கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37 மற்றும் 45 வயதுடைய வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களையும் கேரள கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்பகடவை பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.