உலகம்
கோவிட் தடுப்பு சட்டம் காரணமாக சீனாவில் ஜனாதிபதிக்கு எதிரான பாரிய போராட்டம்
சீனாவின் பல நகரங்களில் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜனாதிபதியும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும் பதவி விலக வேண்டும் என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்ட கடுமையான கோவிட் விதிமுறைகளுக்கு எதிராக சீனாவில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளன.
அந்த விதிமுறைகளை நீக்கக் கோரி இந்த போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன், தற்போது இந்த போராட்டங்கள் அரசுக்கு எதிரான போராட்டமாக வளர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
கடுமையான கோவிட் விதிமுறைகளுக்கு மத்தியில் அடுக்குமாடி வளாகம் பூட்டப்பட்டதால், தீ விபத்து ஏற்பட்டபோது, சம்பந்தப்பட்டவர்களால் தங்கள் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று சீன மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடுமையான கொரோனா விதிமுறைகளால் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கோவிட் விதிமுறைகளால் சம்பந்தப்பட்டவர்கள் இறந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சீன அதிகாரிகள் கடுமையாக மறுக்கின்றனர்.