Connect with us

உள்நாட்டு செய்தி

வெல்வதற்காகவே போட்டியிட வேண்டும்- ஜனாதிபதி

Published

on

தொழில்துறை மற்றும் உற்பத்தி போட்டித் தன்மைக்கு முகம்கொடுக்கும் வகையில் வர்த்தக சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்துடன் கூடியதாக சுங்கத் தீர்வை மற்றும் சுங்கமற்ற தீர்வை ஆகியவற்றை எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு நீக்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத் தரப்பு என்ற வகையில் உலக வங்கியுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதற்காக தனியார் துறை எவ்வாறான ஒத்துழைப்பை வழங்கப் போகிறது என கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, சிவப்புக் கொடியைக் காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதா அல்லது ஒத்துழைப்பு வழங்குவதா என்பது தொடர்பில் தனியார் துறையினர் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சவால்களை மீறி – வாய்ப்புகளை எட்டுதல்’ – எனும் 2023 வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரான கருத்துக்களம், கொழும்பு ஷெங்ரிலா ஹோட்டலில் இன்று (18) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் என்ற வகையில் ஜனாதிபதி, வரவு செலவுத் திட்டத்தை முதலில் முன்வைத்துள்ளார்.

நடைமுறை சாத்தியமான பெறுபேறுகளை பாராமல் தவறான கொள்கைகளை பின்பற்றியமையே நாட்டின் நிதி நெருக்கடிக்கு காரணமென கூறிய ஜனாதிபதி நாட்டை இந்நிலையிலிருந்து மீட்பதாயின் அரசாங்கம் மட்டுமன்றி தனியார் துறையினரும் பொது மக்களும் பாரிய வகிபாகத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு அவசியமான சுகாதாரம் , கல்வி மற்றும் நலன்புரி வசதிகளை வழங்குவதை அரசாங்கம் கையாள வேண்டியிருப்பதனால் தனியார் துறையினரே வியாபாரங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“வேறு வழியில்லை.பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தால் தனியார் துறையும் வளர்ச்சி அடையும் என்பதை நான் அறிவேன். வியாபார முன்னெடுப்புகளை அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியாது.” என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

இது வழமையான வரவு செலவுத் திட்டத்திலும் பார்க்க முற்றிலும் வித்தியாசமானது. இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் கொள்கைகளைப் பார்த்து சிகரட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனவா, வேறு ஏதேனும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளனவா என்பதை தேட முடியாது. அதே கண்ணோட்டத்துடனேயே இந்த வரவு செலவுத் திட்டத்தையும் பார்ப்பீர்களேயானால் நீங்கள் தவறான பாதையில் பயணிக்கின்றீர்கள்.

துரதிஷ்டவசமாக பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் பலர் இந்த தவறை செய்கின்றார்கள்.நாம் தற்போது முன்னொருபோதும் கண்டிராத எதிர்பராத பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருக்கின்றோம். இது பல நாடுகளால் மற்றும் உலகமே சந்தித்திராத்தொரு நிலைமையாகும்.

நாம் இந்நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தவறான கொள்கைகளை பின்பற்றியதன் விளைவாகவே எமக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. ‘கொள்கைகள்’ எனும்போது அவை நடைமுறை சாத்தியமானதாக இருக்க வேண்டும்.
நிதியமைச்சர் என்ற வகையில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே எனது முதலாவது இலக்காகும். இதனை கடந்த ஆகஸ்ட் வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகம் செய்தோம். இதற்கான சட்டவாக்க நடவடிக்கைகளையும் ஆரம்பித்தோம்.

இதற்கு மேலதிகமாக நாம் ஐ.எம்.எப் உடன் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை அடைந்துள்ளோம். தற்போது பிரதான இருதரப்பு கடன் வழங்கனர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்தாக வேண்டும். இதில் இரண்டு, கடன் வழங்கும் நாடுகள் பாரிஸ் கிளப்பில் இல்லை. அவை இந்தியா மற்றும் சீனாவாகும். இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததும் நாம் தனியார் கடன் வழங்குனர்களிடம் சென்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம். அதன் பின்னர் எமக்கு எமது பாதையில் பயணிக்க முடியும். அதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக நாம் பல வேலைகளை முன்னெடுக்க வேண்டும். நாம் பொருளாதார மீட்சி தொடர்பில் ஆராய வேண்டும். அதற்கான திட்டம் என்ன? கட்டமைப்பு என்ன? என்பது தொடர்பில் நாம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.

2023 என்பது உறுதிப்பாட்டுக்கு மட்டுமன்றி மீட்சிக்குமானதொரு ஆண்டாகும்.
உறுதிப்பாட்டுச் செயன்முறைகள் 2026 வரை தொடரும். அப்போது எமது மொத்த தேசிய உற்பத்தி, 2019 ஆம் ஆண்டில் நாம் இருந்த நிலையை எட்டும் என நம்புகின்றேன். எனினும் என்ன நடக்கும் என்பது திட்டவட்டமாக தெரியாது.

இதற்கு மேலதிகமாக நாம் என்ன செய்யலாம்? நாம் தற்போதுள்ள முறைமை தொடர்பில் திருப்தி அடைந்துள்ளோமா? அடுத்த பத்து வருடங்களில் இதே பொருளாதார நெருக்கடிக்கள் சிக்கும் வகையில் நாம் மீண்டும் கடன் வாங்க ஆரம்பிக்கலாமா?

அப்படியானால் ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே இருக்கும். அதாவது, நெருக்கடி எம்மை மூழ்கடிப்பதற்கு முன்னர் நாம் ஐ.எம்.எப் இடம் செல்வோம். ஆர்ஜன்டினாவின் மாதிரியை ஒத்த ஆசியாவாக நாம் மாறி விடுவோம். எனவே இம்முறை நாம் இந்நிலையிலிருந்து எப்படியாவது மீள்வதில் வெற்றிக் காண வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

நாம் முன்னர் பேசிய, பல முறைமைகள் தோல்வி கண்டுள்ளன. இன்றும்கூட பத்திரிகைகளில் அவ்வாறு தோல்வி கண்ட முறைமைகள் பற்றியே எழுதப்படுகின்றன. அதற்கான உதாரணமே 1965 ஆம் ஆண்டு இதே மாதிரியான பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டபோது மறைந்த டட்லி சேனாநாயக்க அவர்கள், அப்போது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராக இருந்த எம்.ஜே. ஷெனன் எனும் இந்தியர் ஒருவரிடம் அது தொடர்பில் அறிக்கையொன்றை கோரியிருந்தார். அதனை நாம் நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று எமது நாடு சிங்கப்பூரிலும் உயர்வானதொரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.

பயந்தால் போட்டியில் வெல்ல முடியாது. வெல்வதற்காகவே இந்தப் போட்டியில் நீங்கள் போட்டியிட வேண்டும். போட்டியில்லா விட்டால் வெல்வது கடினம்.