உலகம்
மனிதனின் உற்ற நண்பனை இனி கொல்ல கூடாது – தென் கொரியாவில் புதிய சட்டம்
நாய்களை “மனிதனின் உற்ற நண்பன்” (Man’s best friend) என அடைமொழியிட்டு கூறுவது வழக்கம். நாய்களை பாதுகாப்பிற்கு ஏற்ற காவலனாகவும், தோழமைக்கு ஏற்ற உயிரினமாக கருதி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் அயல்நாடுகளில் அதிகம்.
தென் கொரிய மக்களில் ஒரு சிலர் நாய் இறைச்சி உண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது உலகளவில் விலங்கின ஆர்வலர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்தது.
தென் கொரியாவின் பல பகுதிகளில் நாய் இறைச்சி பிரியர்களுக்கென பல உணவகங்களில் அவை சமைக்கப்பட்டு, பரிமாறப்பட்டு வந்தது.
இந்நிலையில், தென் கொரிய பாராளுமன்றம் நாய் இறைச்சியை தடை செய்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.
இத்தொழிலை சார்ந்துள்ள தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேறு தொழிலுக்கு மாறும் வகையில் 3-வருட-கால இடைவெளிக்கு பிறகே இச்சட்டம் 2027 இலிருந்து அமலுக்கு வரும்.
அத்தொழிலாளர்கள் புதிய தொழிலில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் வகையில் மானியம் வழங்கி உதவவும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
இச்சட்டத்தின்படி, இறைச்சிக்காக நாய்களை வளர்ப்பது, கொல்வது, இறைச்சியை பதப்படுத்தி விற்பனை செய்வது உள்ளிட்ட அனைத்தும் சட்டவிரோதம். இதனை மீறுவோருக்கு 2 வருட-கால சிறை தண்டனையும், பெரும் தொகை அபராதமும் விதிக்கப்படும்.
தென் கொரிய ஜனாதிபதியின் மனைவி இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். பிராணிகள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் உடைய ஜனாதிபதியும் அவர் மனைவியும் தங்கள் இல்லத்தில் 4 நாய்களும் 3 பூனைகளும் வளர்த்து வருகின்றனர்.
நாய்களை கொன்று உண்பதை தடை செய்யும் சட்டத்தை வரவேற்றுள்ள பிராணிகள் ஆர்வலர்கள், பல வருடங்களாகவே அந்நாட்டில் நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.