Uncategorized
பாடசாலை பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்வு : ஜனாதிபதி
மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
பாடசாலை துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்வு காண முடியும் என தாம் நம்புவதாகவும், இல்லையேல் பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இன்று (23) முற்பகல் இடம்பெற்ற பிரிவெனா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைத் துணிகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவத் தேரர்கள், சில் மாதர்கள் மற்றும் மற்றும் 40 மாணவர்களுக்கு ஜனாதிபதி அடையாள ரீதியாக பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கி வைத்தார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், பதில் கல்விச் செயலாளர் ஹேமந்த பிரேமதிலக மற்றும் சங்கமித்தா மகளிர் கல்லூரியின் அதிபர் துஷாரி டி சில்வா ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைத்தனர்.