Uncategorized
பொறுப்புக்கூறல் மிகவும் முக்கியமானது
நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு நிதிக் கட்டுப்பாடு, ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் அரச அதிகாரிகளின் பொறுப்புக்கூறல் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுடன் நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (20) நடைபெற்ற கலந்துரையாடலில் சாகல ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பின்னணியை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் மதிப்பீடு செய்துள்ளமைக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நிதி முகாமைத்துவம் மற்றும் புதிய பொருளாதார சீர்திருத்தங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினர்.
கடந்த காலங்களில் என்ன தவறுகள் நடந்தன என்பதில் கவனம் செலுத்துவதை விட புதிய சீர்திருத்த திட்டங்களில் கவனம் செலுத்துவது முக்கியம் என்றும், பல்வேறு துறைகளில் காணப்படும் சவால்களுக்கும் சீர்திருத்தங்களில் முன்னுரிமைக்கும் சர்வதேச நாணய நிதியம் வழங்கக்கூடிய ஆதரவு குறித்த ஆராய்ந்து பார்ப்பது முக்கியம் என்றும் அந்த பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு இந்தப் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியமானது என குறிப்பிட்டுள்ள நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன, நிதி முகாமைத்துவம் மற்றும் நிதி மறுசீரமைப்பு துறைகள் முக்கியமானது என்றும் அதற்கமைய நிதி முகாமைத்துவத் துறையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வாய்ப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டனர்.
இப்பணியில் நேரடியாகப் பங்களிக்கும் அரசு நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
சம்பந்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை தொடர்ந்து ஆராய்ந்து அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்காக எதிர்காலத்தில் இவ்வாறான கூட்டங்களை கூட்டுவதன் முக்கியத்துவத்தையும், இந்த செயற்பாடுகளை வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களின் அர்ப்பணிப்பின் அவசியத்தையும் சாகல ரத்நாயக்க மேலும் விளக்கினார்.
இந்த கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.