Uncategorized
உரிய நேரத்தில்
பாடப் புத்தகங்கள்
3000 கோடி ரூபா செலவில் மூன்று கோடி பாடப் புத்தகங்கள்
விநியோக நடவடிக்கைகள் ஆரம்பம் என்கிறார் கல்வி ராஜாங்க அமைச்சர்
2023 இன் புதிய கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை மார்ச் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்க உள்ள நிலையில் நாட்டின் அனைத்து அரச பாடசாலைகளுக்குமாக 3000 கோடி ரூபா செலவில் மூன்று கோடியே 7 லட்சம் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதன் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் உரிய நேரத்தில் பாடப் புத்தகங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் ஹோமாகமை களஞ்சிய சாலையிலிருந்து பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மற்றும் கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது.
பாடசாலைகளுக்கு புதிய பாடப் புத்தகங்களின் விநியோக நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிலையியே புதிய கல்வி ஆண்டுக்காக அரசாங்கம் மூவாயிரம் கோடி ரூபாவை செலவிட்டு மூன்று கோடியே 20 லட்சம் பாடப் புத்தகங்களை அச்சிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மாணவர்களின் எதிர்காலம் கருதி அரசாங்கம் பெருந்தொகை பணத்தை செலவிட்டு புதிய பாடப் புத்தகங்களை அச்சிட்டிருக்கிறது என்பதையும் கூறி வைக்க வேண்டும்.
மேலும் பாட புத்தகங்கள் பாடசாலைகளுக்கு கிடைக்கப்பெறுவதற்கான செயல் திட்டத்தையும் கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது. எனவே அதிபர்கள், அதிகாரிகள் ஒத்துழைத்து பாடப் புத்தகங்களை தங்களது அதிகாரத்தில் உள்ள பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு சிரமம் பாராது செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.