உலகம்
மசூதித் தாக்குதல் – 100 பேர் பலி!
பாகிஸ்தானின் பெஷாவா் நகர காவல்துறை தலைமையக வளாக மசூதியில் தலிபான் பயங்கரவாதி நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியானவா்களின் எண்ணிக்கை 100 ஐத் தொட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலிபான் பயங்கரவாதி திங்கள்கிழமை தாக்குதல் நடத்திய மசூதியின் இடிபாடுகளிடையே சிக்கியிருந்த மேலும் பல உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. அதையடுத்து, இந்த தற்கொலை குண்டுவெடிப்பில் பலியானவா்களின் எண்ணிக்கை 100 ஆக உயா்ந்துள்ளது.
இது தவிர, சம்பவத்தில் காயமடைநத் மேலும் 53 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 7 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
காவல்துறை தலைமையக வளாகத்துக்குள் அமைந்துள்ள மசூதியில், திங்கள்கிழமை மதியம் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவா்கள் இடையே தலிபான் பயங்கரவாதி தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதலை நடத்தினாா்.
இது குறித்து பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தளபதி உமா் காலித் குராசானி என்பவரின் சகோதரா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொண்ட நடவடிக்கையில் குராசானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே பெஷாவா் மசூதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினாா்.
அல்-காய்தா பயங்கரவாத அமைப்புக்கு மிக நெருக்கமானதாக அறியப்படும் பாகிஸ்தான் தலிபான்கள், ராவல்பிண்டியிலுள்ள ராணுவ தலைமையகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல், இஸ்லாமாபாதிலுள்ள மாரியட் ஹோட்டலில் 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் உள்ளிட்ட பயங்கரமான பல தாக்குதல்களை நடத்தியுள்ளனா்.
பெஷாவரில் ராணுவத்தால் நிா்வகிக்கப்பட்டு வரும் பள்ளியொன்றில் கடந்த 2014 ஆம் ஆண்டு தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 131 மாணவா்கள் உள்பட 150 போ் உயிரிழந்தது சா்வதேச அளவில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.