Connect with us

Sports

சாமிக்க கருணாரத்னவுக்கு ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட் தடை

Published

on

2022 ICC ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது, சாமிக்க கருணாரத்னவுக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப்பட்டதால், அவருக்கு அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்க 01 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட, 01 வருட தடை விதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன் 5,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவர் எவ்வாறான தவறுகளில் ஈடுபட்டார் என்பது தொடர்பான விடயங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடரின் போதான, கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்தில் தேசிய ஒப்பந்த வீரர் சாமிக்க கருணாரத்ன, பல விதிகளை மீறியதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக மூவரடங்கிய விசாரணைக் குழு நடத்திய ஒழுக்காற்று விசாரணையில், சாமிக்க கருணாரத்ன தனக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
சாமிக்க கருணாரத்னவின் மீறல்களின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, விசாரணைக் குழு அதன் அறிக்கையின் மூலம் அவர் இவ்வாறான விடயங்களில் மேலும் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில், கடுமையாக எச்சரிக்குமாறும், அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத தண்டனையை விதிக்குமாறும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது.
விசாரணைக் குழுவின் மேற்கூறிய பரிந்துரைகளுக்கமைய, அவரை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்க ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட தடையை விதிக்க SLC நிறுவனத்தின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

குறித்த தண்டனைக்கு மேலதிகமாக சாமிக்க கருணாரத்னவுக்கு எதிராக USD 5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் சாமிக்க கருணாரத்ன சேர்க்கப்படாமை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) கண்டி பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடருக்காக, ஆப்கானிஸ்தான் அணி நேற்று (22) இலங்கை வந்தடைந்தது.
ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன நீக்கப்பட்டமை உட்பட பல சந்தேகத்திற்குரிய தெரிவுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் காரணமாக இதுவரையில் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என விளையாட்டு அமைச்சு தகவல்கள தெரிவிக்கின்றன.
T20 உலகக் கிண்ணத்தில் அவர் பெரிதாக திறமையை வெளிக்காட்டாத போதிலும், கடந்த ஜூன் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி கடைசியாக விளையாடிய ஒரு ஒருநாள் தொடரில் சாமிக்க கருணாரத்ன இரண்டு ஆட்ட நாயகன் விருதுகளை பெற்றிருந்தார்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட இலங்கை அணி தற்போது பல்லேகலவில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.