Sports
வீர,வீராங்கனைகளை வரவேற்க வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு
தாய்நாட்டை ஆசியாவின் உச்சத்திற்கு உயர்த்திய கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட சம்பியன்கள் வாகன பேரணியில் நாளை (13) கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் சம்பியன் பட்டம் மற்றும் பன்னிரண்டாவது ஆசிய வலைப்பந்து சம்பியன் பட்டம் வென்ற இரண்டு இலங்கை அணியினரும் நாளை (13) இலங்கை வரவுள்ளனர்.
அவர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமாண்டமாக வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பின்னர் விளையாட்டு வீரர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மைட்லண்ட் பிளேஸில் உள்ள இலங்கை கிரிக்கெட் தலைமை அலுவலகம் மற்றும் விளையாட்டு அமைச்சின் வளாகத்தில் உள்ள வலைப்பந்து சம்மேளன தலைமையகத்திற்கு விசேட வாகனப் பேரணியில் அழைத்து வரப்படுவார்கள்.
விளையாட்டு அமைச்சு, இலங்கை கிரிக்கட் நிறுவனம் மற்றும் இலங்கை வலைப்பந்து சம்மேளனம் இணைந்து இந்த வாகனப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளதுடன், கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகளின் உத்தியோகபூர்வ அனுசரணையாளர்களான டயலொக் ஆசி ஆடா நிறுவனம் இதற்கு இணை அனுசரணை வழங்குகின்றது. இந்நிகழ்வை சுயாதீன தொலைக்காட்சி மற்றும் பல தனியார் ஊடகங்கள் அவ்வப்போது நாளை நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளன.
காலை 6.30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் வாகனப் பேரணி கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் பேலியகொட சந்தி, மருதானை சந்தி, டார்லி வீதி, யூனியன் பிளேஸ், அலெக்ஸாண்ட்ரா வீதி ஊடாக சுதந்திர மாவத்தையை வந்தடையும். அந்த இடங்களில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தாய்நாட்டை ஆசியாவின் உச்சியில் உயர்த்தி சர்வதேசப் புகழ் பெற்ற இந்த விளையாட்டு வீர,வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி தேசியக் கொடியுடன் வரவேற்க பிரதான வீதிகளுக்கு வருமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு