உலகம்
சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது: வில் ஸ்மித் வசம்
94 வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வில் ஸ்மித் வென்றுள்ளார்.
சர்வதேச அளவில் திரைப்பட உலகின் மிக உயரிய விருதாக ஒஸ்கார் விருதுகள் கருதப்படுகின்றன.
நடப்பாண்டிற்கான 94 வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கியது.
ஹாலிவுட் பவுல்வார்ட் பகுதியில் உள்ள டால்பி திரையரங்கத்தில் விழா நடைபெற்றது.
இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் , ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.
டெனிஸ் வில்லெனு இயக்கிய அமெரிக்க திரைப்படமான “டியூன்” திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஒஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருது என்காண்டோ திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
ஜப்பானிய திரைப்படமான “டிரைவ் மை கார்” சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்றது.
சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை ‘தி குயின் ஆப் பேஸ்கட்பால்’ திரைப்படம் வென்றது.
கோடா திரைப்படத்தில் நடித்த ட்ராய் கோட்சூர் சிறந்த துணை நடிகருக்கான ஒஸ்கார் விருதை வென்றார்.
வெஸ்ட் சைடு ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த அரியானா டிபோஸ் சிறந்த துணை நடிகைக்கான ஒஸ்கார் விருது வென்றுள்ளார்.
இதேவேளை, சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வில் ஸ்மித் வென்றுள்ளார்.