வானிலை
கடும் மழையுடனான காலநிலை.!8 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிப்பு..!
நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் நிலையில், இதனால் நாட்டின் 08 மாவட்டங்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.நாட்டின் பல பாகங்களிலும் இன்று மதியம் முதல் கடும் மழையுடனான வானிலை நீடித்து வருகிறது.மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா உள்ளிட்ட மாகாணங்களில் 100 மில்ல மீற்றருக்கும் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், சீரற்ற காலநிலைக் காரணமாக இதுவரை சுமார் ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதுடன், மரணமொன்றும் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிதுனுவெவ பிரதேசத்திலேயே இந்த மரணம் பதிவாகியுள்ளது.வயலில் வேலை செய்து கொண்டிருந்த 35 வயதுடைய ஒருவரே மின்னல் தாக்கம் காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அதேநேரம், மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவுகள் காரணமாக கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஹல்துமுல்ல – பத்கொட பகுதியில் ஒரு வழி போக்குவரத்து இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்று குறித்த பகுதிக்கு சென்று முன்னெடுத்த பரிசோதனையின் பின்னர், அந்த பகுதியில் ஒரு வழி போக்குவரத்தை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும், அத்தனகலு ஓயாவின் துனமல பகுதியில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்தோடு, நில்வளா கங்கையின் நீர்மட்டம் தலகஹகொட, பனடுகம பிரதேசங்களில் அதிகரித்துள்ளதால் குறித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.மொரகட்டிய பிரதேசத்தில் வளவை கங்கை பெருக்கெடுத்துள்ளதாலும் அங்கு சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த சில மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தின் ஹத்படுனாஓய பகுதியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.குறித்த பகுதியில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.