உள்நாட்டு செய்தி
இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல:ஸ்டாலின்
இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. அவர்களை உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இலங்கை தமிழர்கள் நலத்திட்ட நிகழவில் உரையாற்றிய போதே தமிழக முதல்வர் இதனை கூறியுள்ளார்.
தமிழகத்தில் முகாம்களில் வாழும் 19,046 இலங்கை தமிழர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் 3,510 வீடுகள் கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மேல்மொணவூரில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார்.
மேலும் 30 கோடி இந்திய ரூபா மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார்.
இதில் உரையாற்றிய தமிழக முதல்வர்
“கடந்த 10 ஆண்டு காலம் இலங்கை தமிழர்கள் குறித்து அதிமுக அரசு கவலைப்படவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் இலங்கை தமிழர் நல வாழ்வு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இலங்கை தமிழர்களுக்காக திமுக இருக்கிறது. அகதிகள் முகாமை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்துள்ளோம்.
ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் இலங்கை தமிழர்களுக்காக செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் முகாம்களின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்.
இலங்கை தமிழர் நல வாழ்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முகாம் வாழ் இலங்கை தமிழ் மாணவர்கள் கல்வி உதவி தொகைக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முகாம் வாழ் தொழில் முனைவோர்களுக்காக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் மேலும் தொடரும். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. எனதும் உங்களதும் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றார்.