Sports
மூன்றாவது போட்டியில் வென்ற இலங்கை, ஆறுதலடைந்தது

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா அதிகபட்சமாக 120 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அத்துடன் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் தஸ்கீன் அஹமட் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
பங்களாதேஸின் துடுப்பாட்டத்தில் மஹமதுல்லா 53 ஓட்டங்களையும், மொசடைக் ஹொசைன் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இலங்கையின் பந்து வீச்சில் துஸ்மந்த சமிர 5 விக்கெட்டுக்களையும், ஹசரங்க மற்றும் ரமேஸ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக துஸ்மந்த சமிர தெரிவானார்.