உள்நாட்டு செய்தி
நாட்டில் இன்று அமுலாகும் பயணத்தடை
நாடளாவிய ரீதியில் இன்றைய தினத்தில் இருந்து மீண்டும் முழுமையான பயணத்தடை அமல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுலாகும் வகையில் இந்த பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு மணி வரை மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்போது அத்தியாவசிய சேவைகளை மாத்திரமே முன்னெடுக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருவதை காரணமாக கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அநாவசிய பயணங்களை தவிர்க்குமாறும் இராணுவ தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்
இதேவேளை, முழுநேர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்வதற்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது
எனினும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் அனுமதி அட்டை மற்றும் நிறுவன அழைப்பு கடிதம், நிறுவன அட்டை என்பவற்றை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனிமைப்படுத்தல் மற்றும் பயணத்தடை விதிமுறைகளை மீறி செயற்படும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் விதிகளை மீறுவோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.