உள்நாட்டு செய்தி
தெனியாய கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் அனைத்து மாணவ மாணவிகளையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தீர்மானம்
ஆசிரியை ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தெனியாய கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் அனைத்து மாணவ மாணவிகளையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த மொரவக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தீர்மானித்துள்ளது.
பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டிருந்த கடந்த 27 ஆம் திகதி குறித்த ஆசிரியை பாடசாலைக்கு வந்திருந்ததாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
குறித்த சந்தர்ப்பத்திலும் அவருக்கு தொற்று இருந்தமை தெரிய வந்துள்ளது.
பாடசாலையின் தரம் ஐந்து மாணவர்கள் சிலர் ஆசிரியையுடன் நெருங்கிப் பழகியவர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், ஆசிரியை அன்றைய தினம் பாடசாலையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலும் கலந்துக் கொண்டு இருந்ததாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
அதன்படி, பாடசாலை மாணவர்கள் அனைவரும் அவதான நிலையில் உள்ளதால், அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளனர்.