உள்நாட்டு செய்தி
அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் பற்றாக்குறை !
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2024/12/image-70.png)
கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் தேசிய, மாவட்ட மற்றும் பிராந்திய அரச வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவருகிறது.
வைத்தயசாலைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான பல அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை
நோயாளிகளின் சொந்த செலவில் வழங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த சூழ்நிலை பல நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும்
கூறப்படுகிறது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பல விடுதிகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தாங்களாகவே கொண்டு வர பரிந்துரைக்கப்படுவதாகவும், அவற்றை வாங்குவதற்கு
பணம் இல்லாததால் பல நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் சிரமத்தை அனுபவித்து வருவதாகவும் தெரியவருகிறது.
அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான சில வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நோயாளிகள் தனிப்பட்ட முறையில் வாங்கவேண்டியுள்ளதாகவும், இந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களில் சிலவற்றுக்கு 25,000 -30,000 ரூபாய்
அல்லது அதற்கும் அதிகமாகச் செலுத்தவேண்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த சூழ்நிலையில் அரசாங்கம் தலையிடாவிட்டால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
.மேலும், பல பிராந்திய வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு வழங்க போதுமான மருந்துகள் இல்லை என்றும், நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின்
கடுமையான பற்றாக்குறையாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.