உள்நாட்டு செய்தி
வேலை வாய்ப்பு எனக் கூறி பாரிய மோசடி..!
அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி போலியாக வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார்.இலங்கை மத்திய வங்கியின் இலட்சினையை பயன்படுத்தி மோசடியான விளம்பரம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி அந்த விளம்பரம் பரப்பப்பட்டுள்ள நிலையில், அது ஒரு போலியான விளம்பரம் என்று இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது.மேலும், கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இலட்சினையை பயன்படுத்தி இதேபோன்ற வேலை வாய்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதுபோன்று அரசின் இலட்சினையை பயன்படுத்தி வெளியிடப்படும் போலி விளம்பரங்களுக்கு பதிலளிப்பது பொருத்தமற்றது என இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல சுட்டிக்காட்டியுள்ளார்.போலி வலைத்தளங்கள் மூலம் பெரும்பாலும் உங்கள் தேசிய அடையாள அட்டையின் நகல்கள், கடவுச்சீட்டு நகல்கள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்த சூழ்நிலையிலும் நீங்கள் அத்தகைய வலைத்தளங்களைப் பார்வையிட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்கக்கூடாது. என்றார்.