உள்நாட்டு செய்தி
ஆசிரியை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது…!
கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று (31) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது 36 வயது மூத்த சகோதரர் நேற்று கைது செய்யப்பட்டார்.குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.நேற்று (31) அதிகாலை 3.30 மணியளவில் 33 வயது திருமணமாகாத பாடசாலை ஆசிரியை ஒருவர் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் பொலிஸாருக்கு எழுதியதாக சந்தேகிக்கப்படும் இரத்தக்கறை படிந்த கடிதத்தைக் கண்டுபிடித்தனர்.
அதில் அவர் தனது மகளைக் கொலை செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.அந்தக் கடிதத்தில், மகள் தனக்கு தொந்தரவாக இருந்ததாகவும், அதிகப்படியான பேராசை காரணமாக 14 ஆண்டுகளாக சொத்துக்காக சண்டையிட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொலை இடம்பெற்ற நாளில் தனது கழுத்தை நெரிக்க மகள் வந்ததால் தான் இந்த கொலையை செய்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.இருப்பினும், பொலிசார் அந்த வீட்டிற்குச் சென்றபோது, 76 வயதான தாயாரும் அதிகப்படியான மருந்தை உட்கொண்டு நாற்காலியில் மயங்கிக் கிடந்தார்.
அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.இதன் காரணமாக, அவர் கம்புறுபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உயிரிழந்த பெண்ணின் சடலம் கம்புறுபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.