உள்நாட்டு செய்தி
நண்பியின் தந்தையால் சிறுமி வன்புனர்பு…!
அம்பாறை – ஏறாவூரில் மகளை தேடி வீட்டுக்கு வந்த நண்பியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட தந்தை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர் நன்னடத்தை இல்லம் ஒன்றின் பராமரிப்பில் வாழ்ந்து வரும் 10 வயது சிறுமியே இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.
தாயும் தந்தையும் சிறுமியை விட்டுவிட்டு வெவ்வேறு திருமணங்கள் செய்து கொண்டுள்ள நிலையில், கைவிடப்பட்ட சிறுமி, சிறுவர் நன்னடத்தை இல்லம் ஒன்றின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவதினத்தன்று இந்த சிறுமி மதியம் நன்னடத்தை இல்லத்துக்குத் திரும்பாததால் நன்னடத்தை இல்லத்தின் உத்தியோகத்தர்கள் சிலர் சிறுமியைத் தேடி பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, சிறுமி பாடசாலையில் இல்லை எனவும் அவர் தனது நண்பியின் வீட்டிற்குச் சென்றுள்ளதாகவும் நன்னடத்தை இல்லத்தின் உத்தியோகத்தர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் சிறுமியின் நண்பியின் வீட்டிற்குச் சென்று பார்த்த போது, நண்பி தனது தாயாருடன் வெளியே சென்றுள்ளதாகவும் நண்பியின் தந்தை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பின்னர், நன்னடத்தை இல்லத்தின் உத்தியோகத்தர்கள் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் நண்பியின் 37 வயதுடைய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.