முக்கிய செய்தி
பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் புதிய தகவல்…!
கண்டி, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தவுலகல மற்றும் கம்பளை பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக தனது நண்பி ஒருவருடன் தவுலகல நகருக்கு சென்று கொண்டிருந்தபோது, நேற்று முன்தினம் (11) காலை 7.15 மணியளவில் கறுப்பு நிற வேனில் வந்த சிலர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளனர்.
மாணவியை கடத்திச் சென்று மறைத்து வைத்த இளைஞன் முதலில் 50 இலட்சம் ரூபாவை மாணவியின் தந்தையான வர்த்தகரிடம் கப்பமாக கோரிய பின்னர் அதனை 30 இலட்சமாக குறைத்துள்ளார்.
அதன் பின்னர் மாணவியின் தந்தைக்கு சொந்தமான வேனைக் கேட்டு, 02 இலட்சம் வங்கியில் வரவு வைக்குமாறு மிரட்டியுள்ள நிலையில், அதற்கு பதிலளித்த மாணவியின் தந்தை 50000 ஆயிரம் ரூபாவை உரிய கணக்கில் வரவு வைத்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் அறியவருவதாவது,
குறித்த கடத்தலை நடத்தியவர் மாணவியின் மைத்துனர் என தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி பாடசாலை சீருடை அணிந்து தனது தோழியுடன் வகுப்புக்கு சென்று கொண்டிருந்த போது, வழியில் நிறுத்தப்பட்ட வேனில் இருந்து கீழே இறங்கிய உறவினர் அவளை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றியுள்ளமை சி.சி. ரீ. வி கெமராக்களில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அப்போது, மாணவியை காப்பாற்றுவதற்காக வாலிபர் ஒருவர் வேனில் தொங்கிக் கொண்டு சுமார் 500 மீட்டர் தூரம் சென்று அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும் சந்தேக நபர் அவரை அடித்து வீழ்த்தியுள்ளார்.
பாடசாலை ஆசிரியர் ஒருவர் அருகில் இருந்த மோட்டார் சைக்கிளில் வேனை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்றுள்ளார் எனவும் கட்டுகஸ்தோட்டை நகரில்வைத்து அவர் வேனை தவறவிட்டதாகவும், பின்னர் பொலன்னறுவை நகருக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில், குறித்த வேனை பொலிஸார் நேற்று முன்தினம் (11) பிற்பகல் கண்டெடுத்துள்ளனர்.
கார் வாடகைக்கு விடப்பட்ட இடத்தில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருந்ததால் வேனைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மாணவி கடத்தப்பட்டபோது வேனை ஓட்டிச்சென்ற நபர் பொலன்னறுவையில் வேனை கைவிட்டு வீடு திரும்பும்போது தவுலகல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
19 வயதுடைய மாணவி, சந்தேக நபரின் தாயின் சகோதரரின் மகள் எனவும், அவருக்கு மகளை திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர், ஜப்பானில் சில காலமாக தொழில் செய்து வருவதாகவும் சந்தேக நபர் மாணவி தரப்பில் விருப்பமில்லாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியை கண்டுபிடித்த பின்னரே அவர் மூலம் பெறும் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் தெளிவான தகவல்களை வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை பிரதேசத்தில் குறித்த மாணவியை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் பேரில் தவுலாகல மற்றும் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தி செல்லப்பட்ட மாணவியை கண்டுபிடித்து சந்தேக நபரைப் பிடிக்க மூன்று பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.