உள்நாட்டு செய்தி
மாணவர்களிடையே அதிகரிக்கும் போதை பழக்கம்..!
சமீபகாலமாக பாடசாலை மாணவர்களிடையே புகையிலைக்கு அடிமையாகும் பழக்கமானது அதிகரித்து வருகின்றமையால்,
இது நாட்டின் எதிர்காலத் தலைவர்களின் நல்வாழ்வைகேள்விக்குறியாக்கும் நிலைக்குக் கொண்டு செல்கின்றது .
வளர்ந்து வரும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியதன் அவசரத் தேவையை மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினையை உன்னிப்பாகக் கண்காணித்து நிவர்த்தி செய்வது பெற்றோர்கள், அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார்.
பல பாடசாலை மாணவர்கள் புகையிலை மற்றும் சிகரெட்டுகளுக்கு அடிமையாகி வருவதாக மருத்துவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.
புகைபிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் புகையிலை பயன்பாட்டுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்கள் குறித்து பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களுடன் திறந்த விவாதங்களில் ஈடுபட வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்குப் புகையிலை வாங்கப் பணம் இல்லாதபோது, அவர்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து பணத்தைத் திருடுவதற்கு முயற்சிக்கலாம்,
இது அவர்களை சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் விளக்கியுள்ளார்.
பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களின் நடத்தையை, குறிப்பாகக் கல்வி நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து, மன அழுத்தத்தைக் குறைக்க ஓய்வு நேர நடவடிக்கைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும்.
என்றும் புகையிலைப் பயன்பாட்டிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க பாடசாலைகளில் புத்தக பைகளை சோதனையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களின் வாழ்க்கையில் முன்னெச்சரிக்கையுடன் ஈடுபட வேண்டும்,
அவர்கள் தங்கள் நேரத்தை எங்கு செலவிடுகிறார்கள், யாருடன் பழகுகிறார்கள், தங்கள் நிதியை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும், என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
புகையிலைப் பொருட்களினால் ஒரு இரகசிய இன்பத்திற்கு அப்பால் சிறுவர்கள் சென்றுவிட்டதாகவும், பல சிறுவர்கள் இப்போது வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் வெளிப்புற கற்றல் பகுதிகள் போன்ற இடங்களில் அவற்றைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, புகையிலைக்கு அடிமையான சிறுவர்கள் தாமதமின்றி மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.