உள்நாட்டு செய்தி
O/L பரீட்சை நேர அட்டவணையில் திருத்தம்..!
கல்வி பொதுத் தராதார சாதாரண பரீட்சை நோன்பு காலத்தில் வருவதால் முஸ்லிம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் அரசாங்கம் இதுதொடர்பில் கருத்திற்கொண்டு பரீட்சை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முகம்மத் இஸ்மாயில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற வருட ஆரம்ப நிதிநிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.இது தொடர்பில் நாங்கள் அரசாங்கத்துக்கு நன்றி செலுத்துகிறோம்.
ஆனால் மார்ச் மாத காலப்பகுதியிலேயே தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த காலத்திலேயே கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம் புனித ரமழான் நோன்பும் இந்த காலப்பகுதியிலேயே ஆரம்பிக்கப்படும்.
அதனால் நோன்பு காலத்தில் பரீட்சை இடம்பெறும்போது முஸ்லிம் மாணவர்களுக்கு அது பாதிப்பாக அமையும்.
அதனால் இந்த விடயத்தை கருத்திற்கெண்டு அரசாங்கம் பரீட்சை நேர அட்டவணையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.