உள்நாட்டு செய்தி
வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு!
வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் வாகன இறக்குமதி தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் தலைமையகத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அப்பால் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்புவதில் மத்திய வங்கி வெற்றியீட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் வாகன இறக்குமதி அவசியமான ஒன்று எனவும் வாகன இறக்குமதி அதிகமாக நடந்தால் வரிவிதிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம் அதனை கட்டுப்படுத்தும் திறன் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தனியார் வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அனுமதி வழங்குவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்வும் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.