உள்நாட்டு செய்தி
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் திருத்தம்!
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தும் அரசாங்கம் ஒரு வசனத்தையேனும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்துவதற்காகவேண்டி இந்திய அரசாங்க்ததுடன் பல்வேறு இணக்கப்பாடுகளுக்கு அரசாங்கம் வந்திருப்பதாக தெரியவருகிறது.
இதனையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எமது அண்மை நாடான இந்தியாவுடன் நாங்கள் சிறந்த உறவை வைத்திருக்க வேண்டும். எப்போதும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய நாடாகும்.
என்றாலும் பெற்றோலியம் குழாய் தொடர்பில் இந்தியாவுடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ளப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தி தேர்தலின் போதும் அதிகாரத்துக்கு வந்த பின்னரும் தெரிவித்து வந்தது.
அதேபோன்று வலுசக்தியை இணைப்பதில்லை என தெரிவித்து வந்தது. ஆனால் தற்போது இந்த இரண்டு விடயங்களுக்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவே எமக்கு தெரியவருகிறது. இது இடம்பெறவேண்டும் என்பதே எமது நிலைப்பாடும்.
நாணய நிதியத்தின் இணக்கப்பாடும் அவ்வாறே முன்னெடுத்துச்செல்லுங்கள் என நாங்கள் தெரிவிப்பதில்லை. மாறாக அதில் திருத்தங்களை மேற்கொண்டு முன்னுக்கு செல்ல வேண்டும் என்றே தெரிவிக்கிறேன்.
சர்வதேச இறையாண்மை பிணைப் பத்திர மறுசீரமைப்பு தொடர்பாக அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் உண்மையை கூற முடியாது போயுள்ளது. இணங்கிய ஒப்பந்தமானது பிணைமுறியாளர்களுக்கு சார்பானது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தும் அரசாங்கம் ஒரு வசனத்தையேனும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் எமது மூன்றாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தி 5.5ஆக அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கான பெருமையை இந்த அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ள முடியாது. 2024ஆம் ஆண்டில் எதிர்பார்க்கும் மொத்த தேசிய உற்பத்தி எவ்வளவு என்று அரச தரப்பில் எவராவது கூறுங்கள் பார்ப்போம். எதிர்காலத்தில் என்ன செய்ய முடியும் என்பதே முக்கியமாகும் என்றார்.