முக்கிய செய்தி
சபாநாயகர் பதவியில் இருந்து விலகினார்
பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
அவரது கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்திருந்ததுடன், பலர் அவரது கல்வித் தகைமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் உறுப்பினரான தலதா அத்துக்கோரள உள்ளிட்டோர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இது தொடர்பான கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இந்தநிலையில், இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல்ல அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றையதினம் தெரிவித்திருந்தார்.
மேலும், மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி உறுதியளித்திருந்த நிலையில், சபாநாயகரின் தற்போதைய பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.