Connect with us

முக்கிய செய்தி

அடுத்த வருடம் கடுமையான மருந்து தட்டுப்பாடு ஏற்படலாம்..!

Published

on

அடுத்த வருடத்துக்கு தேவையான மருந்து கொள்வனவு இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்குள் நிறைவு பெற்றிருப்பது அவசியம்.

எனினும் சுகாதார அமைச்சு இது குறித்து ஆர்வம் செலுத்தாமையினால் அடுத்த வருடம் பொதுமக்கள் கடுமையான மருந்து தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள வேண்டியேற்படலாம் என,

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார்.

மருந்துதட்டுபாடுத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த வருடத்துக்குள்ள நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்.

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான ஆவணங்கள் உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்படாமையால் இவ்வாறான நெருக்கடி உருவாகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஹீமோபிலியா நோயாளர்களுக்கு குருதி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்படும் எட்டாவது காரணி என அழைப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஹீமோபிலியா நோயாளர்களுக்கு சிறு கீறல் ஏற்பட்டலும் அதிக இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

இரத்தம் உறைதலுக்கு (பெக்டர்) VII மற்றும் (பெக்டர்) XI ஆகிய இரு காரணிகள், உலக முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் எமிசிசுமோப் ஆகிய மருந்துகள் வழங்கப்படுகின்றன.

எனினும் மேற்படி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் ஹீமோபிலியா நோயாளர்களுக்கு உயிராப்பத்துக்கள் ஏற்படக் கூடிய ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. கடந்த அரசாங்கம் (பெக்டர்) VII மருந்துகளை கொள்வனவு செய்திருந்தது.

எனினும் மருந்துகளின் தரம் குறித்து விசேட வைத்திய நிபுணர்கள் கேள்வி எழுப்பியமையால் அந்த நிறுவனத்திடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை முழுமையாக நிறுத்தப்பட்டது.

சுகாதார அமைச்சில் கடமையாற்றும் அதிகாரிகளின் தேவைக்கேற்ப மருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் தான்தோன்றித்தனமான போக்கால் பொதுமக்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம் எனவும் விசேட வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

சுகாதார அமைச்சு ஹீமோபிலியா நோயாளர்களுக்காக வருடாந்தம் பெருமளவான தொகையை செலவிடுகிறது. ஆகையால் எமிசிசுமோப் எனப்படும் மருந்துவகைளை பயண்படுத்துவதன் மூலம் செலவீனங்களை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

மேலும் இவை வினைத்திறன் மிக்க மருந்தாக வைத்திய நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி மருந்தின் ஒரு குப்பிக்காக 1700 அமெரிக்க டொலர்கள் செலவிட வேண்டியுள்ளதுாக சுகாதார அமைச்சு மருந்து கொள்வனவுக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை கருத்தில் கொண்டு மருந்து கொள்வனவுக்கு ஒப்புதல் வழங்கினால் அது அவர்களுக்கு நிவாரணமாக அமையும்.

அடுத்த வருடத்துக்கு தேவையான மருந்து கொள்வனவு இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்குள் நிறைவு பெற்றிருப்பது அவசியம்.

எனினும் சுகாதார அமைச்சு இது குறித்து ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை. தரமற்ற மருந்து கொள்வனவு மோசடியில் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளருடன் கடமையாற்றிய அதிகாரிகள் தொடர்ந்து மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பணியாற்றி வருகின்றனர்.

ஆகையால் மருந்து கொள்வனவில் தொடர்ந்தும் பல சிக்கல்கள் நிலவி வருவதை காணக் கூடியதாக உள்ளது.

ஒரு சில நிறுவனங்களுடன் இரு நாட்களில் மருந்து கொள்வனவு ஒப்பந்தகங்களை பதிவு செய்த மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மேலும் ஒரு சில நிறுவனங்களில் மருந்து கொள்வனவுக்கான ஒப்பந்தங்களை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுத்தி வருவதாக இறுதியாக வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்சுலின், இமியூனோகுளோபியுளின் உள்ளிட்ட பல மருந்துகளுக்கு சந்தையில் ஏகாதிபத்தியத்தை ஏற்படுத்தியது அதிகாரிகளின் தவறாகும்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு சுகாதாரத் துறைக்கு உரிய அதிகாரிகளை நியமிப்பது புதிய சுகாதார அமைச்சரின் பொறுப்பாகும்.

இவ்வாறான செயற்பாடுகளால் அடுத்த வருடம் பொதுமக்கள் கடுமையான மருந்து தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள வேண்டியேற்படலாம் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *