Connect with us

உள்நாட்டு செய்தி

மன்னாரில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Published

on

மன்னார் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணிகள் தொடர்ந்தும் கடற்படையினரின் கீழ் காணப்படுவதால் தமிழ் மக்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தை பேண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், உள்ளூர் காணி அதிகாரிகளால் உரிமையாளர்கள் உறுதி செய்யப்பட்ட, மூன்று தசாப்தங்களாக இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களுக்கு சொந்தமான, பருத்தித்துறை, கற்கோவளம் பிரதேசத்தில் உள்ள மூன்று ஏக்கர் காணியை விடுவிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

மன்னார் மாவட்டத்தில் உள்ள முள்ளிக்குளம், தலைமன்னார் பியர் பள்ளிமுனை, வங்காலை ஆகிய கிராமங்களில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் காணிகள் இன்னும் அவர்களிடம் இருந்து மக்களுக்கு கை அளிக்க முடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அந்த காணிகளின் உண்மையான உரிமையாளர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“குறிப்பாக முள்ளிக்குளத்திலுள்ள மக்களின் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புக் காணிகள், தலைமன்னார் பியரில் உள்ள சத சகாய அன்னையின் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சொந்தமான காணிகள், வங்காலை நானாட்டான் வீதியின் ஓரத்தில் உள்ள தனிநபர்களின் காணிகள் மற்றும் பள்ளி முனையிலுள்ள குடியிருப்புக் காணிகள் ஆகியவை விடுவிக்கப்படாமல் உள்ளது.”

2007ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி முள்ளிக்குளம் பகுதியில் இருந்த தமிழ் மக்கள் அரச பாதுகாப்புப் படையினரால் வெளியேற்றப்பட்டதோடு, பின்னர், பாதுகாப்புப் படையினர் 1,000 ஏக்கர் நிலப்பரப்பைக் கைப்பற்றினர், அதில் கடற்படைக்கு விசேட பங்குண்டு.

எவ்வாறாயினும், யுத்தம் முடிந்து ஏழு வருடங்களின் பின்னர், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் பத்தில் ஒரு பகுதியான 100 ஏக்கர் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது.

“2016ஆம் ஆண்டு 100 ஏக்கர் விடுவிக்கப்பட்டது. மேலும் 900 ஏக்கர் (04 குளங்கள் கொண்ட விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு நிலங்கள் உட்பட) விடுவிக்கப்படாமல் உள்ளது.”

வடமேற்கு கடற்படைத் தலைமையகம் இப்பகுதியில் நிறுவப்பட்ட பின்னரும் கடற்படையினர் அந்தக் காணிகளை இன்னமும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தலைமன்னாரிலுள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த ‘மடு மாதா’ தேவாலயத்திற்குச் சொந்தமான பெருமளவிலான காணிகள் இன்னமும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தலைமன்னார் பியர் சதா சகாய அன்னையின் ஆலயம் மற்றும் தேவாலயத்தைச் சுற்றியுள்ள நிலமும் படையினர் வசம் உள்ளது. இந்த நிலமும் ,தேவாலயம் மன்னார் மறை மாவட்டத்திற்கு மறைமாவட்ட ஆயருக்கும் மக்களுக்கு சொந்தமானது. சுமார் 10 ஏக்கர் நிலம் வடமத்திய கடற்படை கட்டளைத் தலைமையகம் இதற்குள் நிறுவப்பட்டுள்ளது.”

கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான காணிகள் இதுவரை விடுவிக்கப்படாத போதிலும் இக்கிராமத்தில் வாழும் கத்தோலிக்க மக்கள் ஞாயிறு ஆராதனைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எந்தப் பகுதியிலும் கடற்படை கட்டளைத் தலைமையகம் இவ்வளவு அருகாமையில் அமைக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களும் சுட்டிக்காட்டுவதுடன், ஒரு மாவட்டத்தில் மாத்திரம் இது இவ்வாறு அமைந்திருப்பதும் கேள்விக்குறியாகவே காணப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

பள்ளிமுனை கடற்படை முகாம் அமைக்கப்பட்ட பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு சொந்தமான காணியாகும் எனவும், கடற்படையினர் 2005ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்து இப்பகுதியில் முகாமிட்டு வசித்து வருவதகாவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் கடற்படையினரால் நிறுவப்பட்ட புஸ்ஸதேவ கடற்படைத் தளம் வங்காலை நானாட்டான் வீதியில் அமைந்துள்ளது.

“இந்த நிலம் ஒரு தனிநபருக்கு சொந்தமானது.”

காணிகளை விடுவித்து மக்கள் தமது காணிகளில் சுதந்திரமாக வாழ சந்தர்ப்பம் வழங்குமாறு தமிழ் மக்களின் பிரதிநிதி தனது கடிதத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *