Connect with us

உள்நாட்டு செய்தி

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

Published

on

மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர், பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மன்னார் மாவட்டத்தில் இருந்து மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடற் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர். க. கனகேஸ்வரன் தெரிவித்தார்.

தற்போது குறைந்த தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்படும் நிலை ஏற்படவுள்ள காரணத்தினால் இன்றைய தினம் (25) திங்கட்கிழமை மதியம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்கள அதிகாரிகளையும் அழைத்து குறைந்த தாழமுக்கம் நிலையினை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர், ”மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 43 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரத்து 463 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 629 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 3 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 16 குடும்பங்களைச் சேர்ந்த 56 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மன்னார் மாவட்டத்தில் 14 தற்காலிக நிலையங்கள் அமைக்கப்பட்டு 367 குடும்பங்களைச் சேர்ந்த 1,248 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 16 இற்கும் மேற்பட்ட ஜே.சி.பி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வெள்ளம் தேங்கியுள்ள பகுதியில் இருந்து வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது குறைந்த தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்படும் நிலை ஏற்படவுள்ள காரணத்தினால் இன்று மதியம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்கள அதிகாரிகளையும் அழைத்து குறைந்த தாழமுக்கம் நிலையினை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பிட்ட நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது, தற்போது இடம் பெற்று வரும் உயர் தர பரிட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களில் வெள்ளப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மாணவர்களை எவ்வாறு பாதுகாப்பான முறையில் பரீட்சைக்கு தோற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்ட மீனவர்களை, கடல் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த குறைந்த தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் 400 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மன்னார் மாவட்டத்தில் சராசரியாக கிடைக்கின்ற மழைவீழ்ச்சியில் 3 இல் ஒரு பங்கு மழை வீழ்ச்சி இரண்டு நாட்களின் கிடைக்கும் போது அது மன்னார் மாவட்டத்தில் பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்தும்.

அனர்த்தத்தை தடுக்க மன்னார் மாவட்டத்தில் முப்படையினர், பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் வெள்ள நிலமை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *