முக்கிய செய்தி
நாளை பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு!
நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புகள் நாளை (30) ஆரம்பமாவதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, 30, 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்காளர்கள் தமது அலுவலகங்களிலுள்ள உறுதிப்படுத்தல் அதிகாரிகளின் முன்னிலையில் வாக்களிக்க முடியுமென்பதுடன் இந்த மூன்று தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
‘மேலும் அவர், ‘நாட்டில் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (30) ஆரம்பமாகும். அதன் பின்னர் நவம்பர் மாதம் முதலாம் மற்றும் நான்காம் திகதிகளில் இடம்பெறும்.
தமது பணியிடங்களில் தமது உறுதிப்படுத்தல் அதிகாரிகளின் முன்னிலையில் இந்த மூன்று தினங்களில் வாக்களிக்க முடியும். அதற்கமைய, வாக்களிக்கக்கூடிய நேரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் தபால் மூல வாக்காளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த மூன்று நாட்களில் வாக்களிக்க முடியாமல் போனால் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் தமது அலுவலகம் இருக்கும் மாவட்டங்களிலுள்ள தேர்தல் அலுவலகங்கள், கச்சேரிகளிலுள்ள விசேட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியும்.
அத்துடன், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தபால் திணைக்களத்தினால் அந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, எதிர்வரும் 03 ஆம் திகதி விசேட விநியோக தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 07 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெறும். 07 ஆம் திகதியின் பின்னர் உத்தியோகபூர்வ அடையாள அட்டை கிடைக்கவில்லையென்றால் உப தபால் காரியாலயங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேவேளை, பொதுத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் நேற்று முன்தினம் வரை 845 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் 8 வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்று தற்போது வரையில் நாட்டில் அமைதியான நிலைமையே நிலவுகிறது.
தேர்தல் சட்ட ஏற்பாடுகளுக்கமைய, தவறு, இலஞ்சம், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். விருந்துபசாரம் என்பதன் அடிப்படையில் உணவு அல்லது வேறேதாவதொரு விதத்தில் பணம் வழங்குதல், இலஞ்சம் வழங்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்றால் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்” என தெரிவித்துள்ளார்