Connect with us

வானிலை

காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Published

on

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் காற்று சுழற்சி இன்று இரவு அல்லது நாளை(14.10.2024) காலை காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது நாளை மறுதினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது எதிர்வரும் 17.10.2024 அல்லது 18.10.2024 அன்று தமிழ்நாட்டின் வட பகுதிக்கும் ஆந்திராவின் தெற்கு பகுதிக்கும் இடையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ( கடல் மேற்பரப்பு வெப்பநிலை 30 பாகை செல்சியஸ் இனை விட உயர்வாக இருப்பதாலும் மேடன் யூலியன் அலைவு சாதகமாக இருப்பதனாலும் இது ஒரு தீவிர தாழமுக்கமாகவே இருக்கும்.)

கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளை அதிகாலை முதல் கன மழை கிடைக்க தொடங்கும்.

இடையிடையே இது இடி மின்னலோடு கூடிய மழையாக இருக்கும். இந்த மழை எதிர்வரும் 18.10.2024 வரை தொடரும்.

நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றரை விட அதிகமான வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள் நிலப்பகுதிகளில் காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாழமுக்கம் காரணமாக கடற் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதனால் கிளைகள் முறிந்து அல்லது பாறி விழும் மரங்கள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

குறிப்பாக வீதியோர மரங்கள் தொடர்பாக வீதியால் பயணிப்போர் எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது. அதே வேளை எதிர்வரும் 22.10.2024 அன்றும் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்- என தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *