Connect with us

உள்நாட்டு செய்தி

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி போராட்டத்தில் ஈடுபடும் தாயிடம் பொலிஸார் விசாரணை….!

Published

on

போரிலும் அதன் பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி இலங்கையில் நீண்டகால தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்த் தாய், புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸில் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அம்பாறை அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கு நேற்று முன்தினம் (ஒக்டோபர் 8) அழைக்கப்பட்டிருந்தார்.

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் (CTID) தலைமையகத்திற்கு கடற்படை மற்றும் இராணுவம் விடுத்த கோரிக்கைக்கு அமைய விசாரணை மேற்கொள்ளப்படுவதாக, சுமார் இரண்டு மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தனிப்பட்ட விபரங்கள் அடங்கிய கோவை சீருடை அணிந்திருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டிருந்ததோடு, தன்னிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளும் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் அந்த அதிகாரியிடம் வழங்கப்பட்டிருந்ததாக தம்பிராசா செல்வராணி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் எத்தனை வருடங்கள் இருந்தீர்கள்? என கேள்வி எழுப்பிய பொலிஸ் உத்தியோகத்தர், அக்காலப்பகுதியில் எத்தனை இராணுவ உறுப்பினர்களை கொலை செய்தீர்கள் என தன்னிடம் கேள்வி எழுப்பியதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளரான தம்பிராசா செல்வராணி கூறுகிறார்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அழிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த விடுதலைப் புலிகளை இந்தியாவிலும் பிரான்சிலும் மீளக் கட்டியெழுப்ப முயற்சி நடப்பதாகச் செய்திகள் வெளியாகி வருவதாகக் குறிப்பிட்டு, நீங்கள் இலங்கையில் இருந்து அதற்குத் தலைமை தாங்குகிறீர்களா என விசாரணையை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி அவரிடம் கேட்டுள்ளார்

“எனக்கு இப்போது 53 வயது. எதிர்வரும் 12ஆம் மாதம் 24ஆம் திகதி 54 வயது. எனக்கு நடந்து என்னுடைய வேலைகளை செய்துகொள்ள எனக்கு உடம்பில் சக்தியில்லை. இப்படி இருக்கையில் நான் எங்கே? நீங்கள் தானே ஒழிச்சுப்போட்டுட்டோம், அழிச்சுப்போட்டுட்டோம் என சொல்கிறீர்கள்?” என பதிலளித்த செல்வராணியிடம் “அப்படி நீ செயற்படவில்லையா?” என அதிகாரி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அப்படி ஒன்றே இல்லையே. அப்படி செயற்படுவதில்லையா இல்லை சேர். அப்படி ஒன்று இல்லை.” என பொலிஸ் அதிகாரிக்கு பதிலளித்த செல்வராணி, தனது கடந்த கால நடவடிக்கைகளை பொலிஸார் நினைவுபடுத்துவது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனக் கூறி தேடப்படுவது முன்னாள் புலி உறுப்பினர்களைத் தானே? என பொலிஸ் அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

“அவர்கள் வேறு. அவர்கள் இப்போது கடவுள். பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தவர்களை தேடி வருகிறோம். சரணடைந்தவர்கள், மேலும் நாங்கள் ஒப்படைத்த சிறுவர்களை தேடுகிறோம்” என அவர் பதிலளித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உங்கள் இலட்சிம் என்னவென பொலிஸ் அதிகாரி கேட்டபோது, ​​​​தனது அன்புக்குரியவர்களின் கதி என்ன என்பதை அறிவதற்காகவே தாம் போராடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போராட்டம் காணாமல் ஆக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைவரின் நலனுக்காகவா என பொலிஸ் அதிகாரி கேள்வியெழுப்பிய போது, ​​வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் தம்பிராசா செல்வராணி “அனைவரின் தலைவிதியைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென்பது தனது நோக்கம்” என தெரிவித்துள்ளார்.

“ஆம். யாராக இருந்தாலும் மனிதர்கள் தானே? அவர்கள் அனைவருக்கும் என்ன நடந்தது என்பதை அறிய வேண்டும்.”

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களைக் காணாமல் ஆக்கியது யார் என்பது தெரியவரும் என்பதால் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமா என பொலிஸ் அதிகாரி தம்பிராசா செல்வராணியிடம் கேட்டுள்ளார்.

குற்றவாளிகள் கொல்லப்படக்கூடாது, சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார். “ஆம். கண்டிப்பபாக செய்ய வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கொல்லத் தேவையில்லை. சிறைத்தண்டனை எப்படி இருக்கும் என்பதை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.”

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது உறவினர்களைக் கண்டறிய ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வு உட்பட உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தாம் மேற்கொண்ட போராட்டங்களின் புகைப்படங்களும் தன்னிடம் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரியிடம் இருந்த கோவையில் காணப்பட்டதாக தம்பிராசா செல்வராணி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *