Connect with us

முக்கிய செய்தி

13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

Published

on

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என உறுதியளித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையை வெளியிடுவதைத் தவிர்த்துள்ளார்.

“புதிய அரசாங்கம் அமைந்த பின்னர், நாங்கள் அந்த வேலையைத் தொடங்குவோம், அங்கு நாங்கள் அந்த விடயத்தை அணுகுவோம்.”

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிப்பதற்காக இன்று (ஒக்டோபர் முதலாம் திகதி) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வு வழங்கப்படுமெனவும், 13வது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவெனவும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் சிங்கள மொழியில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அது அமைந்திருந்தது.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட விஞ்ஞாபனத்தில் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

“முதலாவது விடயம் கடந்த காலத்தில் இடம்பெற்றது ஜனாதிபதி தேர்தல். ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஒருவர் தெரிவாகியுள்ளார். அரசாங்கத்தை அமைப்பதற்கு இப்போது நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர்தான் அரசாங்கத்தை அமைக்கும் விடயம் இடம்பெறும். எனவே, எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில், புதிய அரசியலமைப்பை உருவாக்கி, அதனை இந்நாட்டு மக்களிடம் சமர்ப்பித்து, இந்த நாட்டு மக்களின் பொதுக் கருத்தின் அங்கீகாரத்தைப் பெற்று, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான கொள்கை மற்றும் வேலைத் திட்டம் தெளிவாக உள்ளது.”

புதிய ஜனாதிபதியின் மூவரடங்கிய அமைச்சரவைக் கலந்துரையாடலில் அரசியல் கைதிகள் தொடர்பில் கலந்துரையாடப்படாவிட்டாலும், அவர்களின் விடுதலைக்கான சட்டக் கட்டமைப்பு தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடப்படும் என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

“எங்கள் நிலைப்பாடும் அதுதான். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கான சட்ட கட்டமைப்பு உள்ளது. நீதி அமைச்சிடமிருந்து தேவையான அறிக்கைகளை பெற்றுக்கொண்டு அந்த விடயங்களை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். எனவே நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் பிரதான விடயங்கள் குறித்தே இடம்பெற்றது. அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை, ஆனால் எதிர்காலத்தில், குறிப்பாக புதிய அரசாங்க செயல்முறையுடன், நாங்கள் நிச்சயமாக தீர்மானம் எடுப்போம்.”

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள போது ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை எவ்வாறு அரசாங்கமாகாது என்பதை அமைச்சர் விளக்கவில்லை.