முக்கிய செய்தி
IMF உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பில், நாளை (02) இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழுவினருடன் கலந்துரையாடப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், சர்வதேச நாணய நிதிய திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து மதிப்பீடுகள் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இந்த மாத இறுதியில் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள கூட்டத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தலைமையிலான உயர்மட்ட குழு நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்த உயர்மட்ட குழு எதிர்வரும் 4ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து பல தரப்பினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளது.