உள்நாட்டு செய்தி
பாரிய புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை…..!
இலங்கை முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனித புதைகுழிகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துமாறு புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை இடதுசாரி கட்சியொன்று வலியுறுத்தியுள்ளது.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நவ சமசமாஜக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி நாடளாவிய ரீதியில் சுமார் 13,000 வாக்குகளைப் பெற்ற பிரியந்த விக்ரமசிங்க, செப்டெம்பர் 26ஆம் திகதி கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்தி, கடந்த காலங்களில் வடக்கிலும் தெற்கிலும் புதிய மனித புதைகுழிகள் கண்டறியப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
“ஒரு விடயத்தை உறுதியாகச் சொல்ல முடியும். கடந்த காலம் முழுவதும் வடக்கிலும் தெற்கிலும் வெகுஜன புதைகுழிகள் கண்டறியப்பட்டதை நாம் அறிவோம். அதாவது இந்த காணாமல் போனமை தொடர்பில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு இப்போது எங்கும் போராட்டங்கள் கிளம்பியுள்ளதை நாம் அறிவோம். மனித உரிமைகள் பேரவை செப்டெம்பர் மாதம் கூடுகிறது. இப்போது இது தொடர்பான விடயங்களும் அங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.”
13 ஜூலை 2024 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் உள்ள பழைய செயலக வளாகத்தில் புதிய அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்காக நிலத்தை தோண்டும் போது மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தை நினைவு கூர்ந்த பிரியந்த விக்ரமசிங்க, இந்த விடயத்தில் புதிய அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
“இப்போது தென் மாகாணத்தில் மாத்தளை போன்ற பிரதேசங்களிலும் சூரிய கந்த போன்ற பிரதேசங்களிலும் பாரிய மனித குழிகள் கண்டறியப்பட்டன. நாங்கள் அண்மையில் துறைமுக பிரதேசத்தில் கிடைத்துள்ளது. உயர் பாதுகாப்பு வலயத்தில். அந்த கட்டிடத்தை அண்மித்து புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலை இல்லாத எலும்புகளும் கிடைத்துள்ளதால் இதை சாதாரண புதைகுழியாக கருத முடியாது. எனவே, இவை தொடர்பில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என வன்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம். உடனடி நடவடிக்கை எடுக்கலாம். தள்ளிப்போடும் விடயம் அல்ல இது. “
கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29, 2023 அன்று மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுயிலிருந்து 52 பேரின் எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2024 ஜூலை 15ஆம் திகதி மூடப்பட்டது.
வடக்கில் கண்டறியப்பட்டுள்ள பல மனித புதைகுழிகளை நினைவு கூர்ந்த நவ சமசமாஜக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பிரியந்த விக்ரமசிங்க, வலிந்து கணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தீவிர கலந்துரையாடல் இடம்பெற்று வரும் இவ்வேளையில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழிகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவான பதில் வழங்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை மேலும் வலியுறுத்தியுள்ளார்.
“மேலும், வடக்கில், பல பாரிய மனித புதைகுழிகள் கண்டறியப்பட்டன. எனவே, இவை குறித்து உரிய விசாரணை நடத்தி, மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆகவே நாங்கள் அரசாங்கத்திற்கு தெளிவாக கூறுகின்றோம், உடனடியாக தலையிட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான தீவிர கலந்துரையாடலுக்கு மத்தியில் மக்களுக்கு தெளிவான பதில் தேவை என்பதை நாங்கள் தெளிவாக கூறுகின்றோம்.”
பலவந்தமாக காணாமல் போதல்களுக்கு தீர்வு காணப்படாத இரண்டாவது நாடாக ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு விரிவான அறிக்கை
கடந்த ஆண்டு, நாடு முழுவதும் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் பணிபுரியும் ஐந்து உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பாரிய புதைகுழிகள் தோண்டப்படுவது தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்களை கொண்டு வர உறுதியளிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தின.
2023 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் திகதி கொழும்பில், பாரிய புதைகுழிகளைத் தோண்டி விசாரணைகளை நடத்துவதில் பெருநிறுவனத் தோல்வியின் முறைமை குறித்த கூட்டு அறிக்கை ஒன்று, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி நிலையம் (CHRD) பெண்களின் நடவடிக்கைகள் வலையமைப்பு (WAN), காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அமைப்பு (FoD), சர்வதேச உண்மை மற்றும் நீதித் செயற்றிட்டம் (ITJP) மற்றும் இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (JDS) அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து வெளியிட்டது.
“ஸ்ரீலங்காவிலுள்ள பாரிய மனித புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுப் பணிகளும்” (ශ්රී ලංකාවේ සමූහ සුසාන හා අසාර්ථක කැනීම් – Mass graves and failed exhumations in Sri Lanka) என்ற தலைப்பில் கொழும்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் விசாரணைகளில் அரசாங்கத்தின் நிறுவன ரீதியான தலையீட்டை வெளிப்படுத்தியிருந்தது.
70 பக்கங்களுக்கு மேல் கொண்டமைந்த இந்த அறிக்கையில், நாடு முழுவதும் 30 ஆண்டுகளாக அகழ்ந்து எடுக்கப்பட்ட 20 வெகுஜன புதைகுழிகள் பற்றிய விரிவான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், இலங்கையில் மேலும் இரண்டு மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
“இலங்கையில் பாரிய புதைகுழிகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதில் அரசியல் ரீதியான விருப்பம் இல்லை” என மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பாரிய மனித புதைகுழி வழக்குகளில் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணியுமான கே.எஸ். ரத்னவேல் கடந்த வருடம் கூறியிருந்தார்.