Connect with us

Election 2023

சட்டவிரோத செயற்பாடுகள் தவிர்க்க வேண்டும்- தேர்தல்கள் ஆணைக்குழு –

Published

on

வாக்களிப்பின்போது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.இதற்கமைய வாக்களிப்பு நிலையங்களில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துதல், புகைப்படம் எடுத்தல், காணொளிப் பதிவு செய்தல், ஆயுதங்களை தம்வசம் வைத்திருத்தல் என்பனவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.அத்துடன் வாக்களிப்பு நிலையத்தில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் அல்லது போதைப்பொருள் பாவனையுடன் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்வது சட்டவிரோதமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.இதேவேளை வாக்காளர் ஒருவர் தமது வாக்கைச் செலுத்தியதன் பின்னர் அதனைக் கையடக்க தொலைபேசியில் படம் எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிடுவது சட்டவிரோதமாகும்.அத்துடன் வாக்கைச் செலுத்தியதன் பின்னர், தாம் வாக்களித்த வேட்பாளரின் பெயரை வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியில் வந்து கூறுவது தேர்தல் சட்டத்திற்கு முரணானதாகும்.எனவே குறித்த செயற்பாடுகள் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதேவேளை வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழைய அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அறிவிப்பையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்.இதற்கமைய, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் கடமையில் ஈடுபடும் பணியாளர்கள், தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மாத்திரம் வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள், அவர்களது தேர்தல் முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், பிரதேச முகவர்கள் மற்றும் உரிய வகையில் நியமிக்கப்பட்ட வாக்களிப்பு முகவர்கள் ஆகியோருக்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுதவிர தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்க முடியும்.இவர்களைத் தவிர வேறு எவருக்கும் வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *